Tuesday, July 20, 2010

நாடு... அதை... நாடு...

மி.மு.கு. (மிக முக்கிய குறிப்பு)
(இந்த அஞ்சலை (இவ்வஞ்சலை) படிக்கும் நேரத்தில் உங்களுக்கு நமது நாடோ, தலைவர்களோ, 24/7 மக்கள் தொண்டாட்டிக்(sorry ஆற்றிக்) கொண்டிருக்கும் தமிழ்(?!?!?) தொலைக்காட்சிக் கால்வாய்களினுடைய டமில் நிகழ்ச்சிகளின் நினைவுகளோ ஏற்பட்டால் அதற்கு யாமோ இந்த தளமோ பொறுப்பல்ல)

எந்த ஒரு நாடு நம்பிக்கைகள் நிறைந்ததாகவும், ஆனால் தன் சமயத்தை நோக்க அது உள்ளீடற்ற வெறும் வெற்றுக்கூடாகவும் இருக்கின்றதோ? அந்த நாடு மிகவும் இரங்கத்தக்கதே!!!

எந்த ஒரு நாடு தானே நூற்றுத் தானே நெய்யாத ஆடையை உடுத்திக்கொள்கின்றதோ?
தானே அறுவடை செய்யாத உணவை உண்ணுகின்றதோ?

எந்த ஒரு நாடு தன் ஆலைகளில் பிழிந்து வழித்தெடுக்கப்படாத திராட்சைத் தேறலைக் குடிக்கின்றதோ? அந்த நாடு இரங்கத்தக்கதே!!!

எந்த ஒரு நாடு கொடிய துன்மார்க்கனைத் தன் தலைவன் என்று ஆரவாரித்து வரவேற்கின்றதோ, எந்த நாடு கவர்ச்சியால் ஆளவந்தவனை வள்ளல் எனக் கருதுகின்றதோ? அந்த நாடு இரங்கத்தக்கதே!!!

தன் கனவிலே எழுதுகின்ற பெருவிருப்பத்தை வெறுத்திகழ்ந்து, தான் தன் விழிப்பு நிலையிலேயே சரணடைகின்ற எந்த ஒரு நாடும் இரங்கத்தக்கதே!!!

எந்த ஒரு நாடு சவ ஊர்வலத்திலே நடந்து போகையில் அல்லாமல் பிற நேரங்களில் தன் குரலை உயர்த்தித் தன் கருத்தினைக் கூறவில்லையோ?

எந்த ஒரு நாடு இடிந்த புராதானச் சின்னங்களின் இடையிலே வீழ்ச்சியின் மத்தியிலே அல்லாமல், பிற இடங்களில் தன்னைப்பற்றிப் பெருமிதத்தோடு பேசவில்லையோ?

எந்த ஒரு நாடு தன்னுடைய தலைவெட்டுப் பாறைக்கும், கொலை வாளுக்கும் இடையிலே சிக்கிக்கொண்டுள்ள காலத்தில் அல்லாமல் பிற நேரங்களில் புரட்சி செய்யவில்லையோ? அந்த நாடு இரங்கத்தக்கதே!!!

எந்த நாட்டிலே அவர்களின் தலைவன் ஒரு தந்திரமுள்ள நரியாக உலவுகின்றானோ, அவர்களின் தத்துவஞானி ஒரு ஜாலவித்தைக்காரனாக இருக்கின்றானோ?

எவர்களுடைய கலை, பல ஒட்டுப்போட்டக் கந்தலாகவும், பல போலிக்குரல் எழுப்பும் விகடக் கச்சேரியாகவும் இருக்கின்றதோ அந்நாடு இரங்கத்தக்கதே!!!

எந்த ஒரு நாடு ஒரு புதிய மன்னனை எக்காள ஒலியுடன் வரவேற்று, பிறகு அவனைக் கேலி பேசி துரத்திவிட்டு வேறு ஒரு புதிய மன்னனை எக்காள ஒலியுடன் வரவேற்கின்றதோ? அந்நாடு இரங்கத்தக்கதே!!!

எந்த ஒரு நாட்டிலே முனிவர்களும், துறவிகளும் ஆண்டாண்டு காலமாக மௌனமாக உள்ளனரோ?

எந்த ஒரு நாடு பற்பல துண்டுகளாக தான் உடைந்துபோய், அந்த ஒவ்வொரு துண்டும், தன்னை ஒவ்வொரு நாடாக எண்ணுகின்றதோ? அந்த நாடு இரங்கத்தக்கதே!!!

---------------- கலீல் ஜிப்ரான்

No comments:

Post a Comment