Saturday, August 14, 2010

வாழ்க்கை

பிரிவாகிய ஊழியைத் தாங்கிக்கொள்ளும் வினாடிகளும் உண்டு, ஆயினும் பிரிவென்பது உள்ளத்தின் சோர்வும், களைப்பும் அல்லாமல் மற்றொன்றும் இல்லை. அனேகமாக நாம் யாரும் உண்மையில் பிரிவதே இல்லை.

இங்கு வாழும் எல்லாவற்றைக் காட்டிலும் வாழ்க்கை மிகவும் முதிர்ந்தது. புராதானமானது.

பூமியிலே அழகுள்ளவைகள் தோன்றுவதற்கு முன்னமே அழகு எவ்வண்ணம் வானத்திலே சிறகடித்துப் பறந்திருந்ததோ?

உண்மை தான் உச்சிக்கப்படா முன்னரும் உலகிலே, உண்மை, தான் எவ்வண்ணம் உண்மையாகவே நிலவி வந்ததோ? அவ்வண்ணமே வாழ்க்கையும் ஆம்.

வாழ்க்கை நம் அமைதியிலே பண்ணிசைத்து, அறிதுயிலிலே கனவு காண்கிறது. நாம் தளர்ந்து தாழ்ந்துள்ள காலங்களிலும் வாழ்ந்து உயர்ந்து அரசோச்சுகின்றது.

நாம் இந்த வாழ்க்கையை அர்த்தமற்றது, பயனற்றது எனப்பல நேரங்களில் கருதி இருக்கிறோம். அது எப்போதெனில் நம்முடைய ஆன்மா தனித்த இடங்களில் அலையும் போதும், அதிகமாக தன்னலம் எனும் மதுவைக் குடித்திருக்கும்போதும்தான்.

வாழ்க்கை ஆழமானது. மிக மிக உயர்ந்தது. மிக தூரத்திலே உள்ளது. உங்கள் தூரப்பார்வை அதன் பாதங்களை மட்டுமே தொட முடியுமாயினும், அது உங்கள் பக்கத்திலேயே இருக்கிறது.

உங்களின் உயிர்ப்பின் உயிர்ப்பு அதனுடைய இதயத்தினைத் தொடுமாயினும், உங்களின் நிழலின் நிழல் அதன் முகத்தைக் கடந்து போனாலும், உங்களுடைய மெல்லிய அழுகுரல் கூட, அதனுடைய இதயத்திலே, இளவேனிற்காலமும், இலையுதிர்க் காலமுமாக ஆகின்றது.

--------------- கலீல் ஜிப்ரான்

No comments:

Post a Comment